புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். 1977ல் அ.தி.மு.க சந்தித்த முதல் பொது தேர்தலுக்கு எழுதிய கடிதம்
ரத்ததின் ரத்தமே
1967 1976
இந்த எண் மாற்றத்தைப் புரிந்து கொள்ளுங்கள் - லஞ்ச ஊழலாட்சியைத் தமிழக மக்கள் தூக்கி எறிந்தது 1967 - 1976. இருமுறையும் அமரர் அண்ணாவின் கொள்கையை மக்கள் ஏற்றுக் கொண்டனர் என்ற வரலாறு உருவாக்கப்பட்டு விட்டதாக உலகம் இப்போதே பேசுகிறது. எத்தனை பேர்களைக் கொலைக்காரக் கொடுமையாளர்களால் பலி வாங்கிவிட முடியும்? நூறா? ஆயிரமா? பத்தாயிரமா? ஒரு லட்சம் என்றே வைத்துக் கொள்வோம் இப்போதே அண்ணா தி.மு.கழகத்தில் ஏறத்தாழ பதினேழு லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறோம். மீதியுள்ள கழகக் கண்மணிகளாகிய நம்மை என்ன செய்து விட முடியும்? அப்போது சட்டம் இந்த கொலைக்கார, கொள்ளைக்கார கும்பலை நேர்மையின் உதவியுடன் நீதியின் முன் நிறுத்தும் நியாயச் சட்டமும் உங்களின் உரமிக்க கொள்கைப் பிடிப்பில் வலிவும், இப்போது நம்மைத் துன்பத்திற்குள்ளாக்கும் தீயவர்களைச் சுட்டெரிக்கும். ஆம் இந்தத் தமிழகத்தில் இதுவரை இந்தத் துன்மதியாளர்களினால் ஏற்படுத்தப்பட்ட களங்கம் துடைக்கப்படும்.
எனது ரத்ததின் ரத்தமே! எழுந்திருங்கள்! கச்சையை இறுகக் கட்டுங்கள் நாம் எதற்கும், யாருக்கும் பயந்தவர்களோ, பதுங்கி ஒடிவிடுபவர்களோ அல்ல என்பதை நமது வீரமிக்க செயலால் தமிழகத்தின் நல்ல விதியை உலக வரலாற்றில் எழுதிக் காட்டுவோம். நாம் அமரர் அண்ணாவின் தம்பிகள். நமக்கு என்றும் தோல்வியே கிடையாது. நாளை நமதே மக்கள் நம் பக்கம் வெற்றியும் நமதே.