Friday, April 29, 2011

MGR Story

MGR wrote an article titled “After Fame” (புகழுக்குப்பின்) in 1961. This is an extract from the article. MGR narrates a small story how a person should lead the life, how much fame lasts in this world.

 

ஒரு ஊரில் ஒரு சிறுவன் இருந்தான். அவன் புகழ் பெற்ற ஒரு திறமைசாலியைக் கண்டான். அந்தத் திறமைசாலி மாடு பிடிப்பதில் மாவீரன். இவனுக்கு அவன் மீது அளவற்ற பற்று ஏற்பட்டது. அந்த திறமைசாலிக்கு ஒரு நாள் மிகப் பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. பெரும் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு திறமைசாலியைப் போற்றிப் புகழ்ந்தனர் மக்கள். சிறுவனும் உள்ளம் பூரித்துத் திறமைசாலியைப் போற்றினான்.

 

அந்தத் திறமைசாலியை ஒரு முறையாவது தொட்டு மகிழ வேண்டுமென்ற ஆர்வம் அவனுக்கு ஏற்பட்டது. அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்து விட்டால் அதுவே தன் வாழ்வில் பெறக்கூடிய பெரும் பாக்கியமாகக் கருதினான். அந்தப் பாக்கியத்தைப் பெறுவதற்காக அவன் எடுத்த முயற்சி மிகப் பெரியதாக இருந்தது.

 

காலம் சுழன்றது.

 

இப்போது சிறுவன் வாலிபனானான். இவனுக்கு இருந்த ஆர்வத்தால் இவனே பெரிய திறமைசாலியானான். சந்தர்ப்பமும் கிடைத்தது திறமையைக் காட்ட…

 

நாளடைவில் மிகப் பிரபலமானவனாக மாறி, ஏராளமான புகழ் மாலைகள் சூட்டப்பட்டான்.

 

ஒரு நாள் இந்த புதிய திறமைசாலியான வாலிபனுக்கு மாபெரும் வரவேற்பு விழா நடந்தது. இவனை பலரும் சூழ்ந்து கொண்டார்கள். எல்லாருக்கும் தர்மம் செய்து கொண்டே வந்தான். அப்போது ஒரு பிச்சைக்காரன் அவனிடம் காசு கேட்டதோடு உன் புகழாவது நிலையானதாக இருக்கட்டும் என்று வாழ்த்துக் கூறவே, வாலிபன் அவனை உற்று நோக்கினான்.

 

அவனுக்குத் திகைப்பாகி விட்டது. காரணம் இது தான். முன்பு யாரைத் தொடுவதைப் பெரிய பாக்கியமாக இவன் கருதினானோ, அவனே தான் இப்போது இவனிடம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான்.

 

வருவான், போவான் என்பவை வாழ்க்கையின் இரு வினை முற்றுக்கள். அவை திரும்பத் திரும்ப வரும் போகும் இதுவே இயற்கை.

 

ஆகவே கலைஞர்களைப் பொறுத்த வரையில் திறமையைக் காண்பிப்பதிலே போட்டியேற்படுவதில் தவறில்லை. ஆனால் இன்னொருவனுடைய திறமை தன்னுடைய அழிவுக்குக் காரணமென்று நினைப்போமானால் – நம்மையும் நம்மை ஆட்டிப்படைக்கிற சக்தியையும் ஏமாற்றுகிறோம் என்று தான் பொருள்.

2 comments:

Jayachandran Ariga said...

revolutionary leader is great narrator if my memory is right this story is about his real life incident if the fans or people read the biography they get volumes of rightful thoughts.

Methil Rajan said...

புகழ் பெற்றவர்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதனும் கடைபிடிக்க வேண்டிய கொள்கை இது. காலம்.....இது எந்த ஒரு மனிதனையும் புகழின் உச்சிக்கும் கொண்டு செல்லும். தவறினால் கீழேயும் தள்ளி விடும். இதை உணர்ந்து ஒவ்வொரு மனிதனும் செயல் பட வேண்டும்.